Monday, May 22, 2017

சாஜித் அஹ்மத் --- தீரனின் கதை உலகம் -

தீரனின் கதை உலகம் - #தீரதம்

000



இரவோடு இரவாக, ஒரே மூச்சில் தீரன் ஆர்.எம் நௌஸாதின் 'தீரதம்' சிறுகதை தொகுப்பினை வாசித்து முடித்து விட்டேன். தீரனின் கதையுலகம் மிக விசித்திரமானது. நட்டுமை, கொல்வதெழுதுதல் 90 போன்ற நாவல்களில் புரிந்து கொள்ளப்பட்ட விடயமது. வெள்ளி விரல் சிறுகதை தொகுப்பிற்குப் பிறகு தீரனின் தீரதம் வாசிக்க கிடைத்ததில் பெரு மகிழ்ச்சிதான். 

கவிதைகளால் மாத்திரம் நிரம்பி வழிகின்ற இக்கால எழுத்துச் சூழலில் நாவல்களினதும், சிறுகதைகளினதும் வருகை அதிசயமாகவே நிகழ்கிறது. அதிலும் கிழக்கில், கவிதைத் தொகுப்புக்களின் வருகையானது மலிந்து கிடக்கின்ற பண்டப் பொருளாகிவிட்டது. நாமெல்லாம் பயந்துவிடாதபடி தீரன் கவிதைகள் எழுதவில்லை என்பது பெரும் திருப்திதான்.


'ஒய்த்தா மாமா' என்று ஒரு கதை இருக்கிறது இத் தொகுதியில். ஒவ்வொரு முஸ்லிமும் சந்திக்க வேண்டிய ஒரு முக்கிய கதாப்பாத்திரமாக அதனை வடிவமைத்திருக்கிறார் தீரன். தற்கால முறையில் வைத்தியர்களே சுன்னத்து வைத்து விடுவதால் ஒய்த்தா மாமாக்களின் வருகையும் குறைந்து விட்டது என்கிறார். எல்லாவற்றையும் தாண்டி சுன்னத்துக் கல்யாணமும், குஞ்சாமணியினை வெட்டி விடுவார் என பயமுறுத்தும் நினைவுகளையும் மிக அற்புதமாக சொல்கிறார் தீரன். கலாச்சார பண்பாடுகளின் மறக்கடிக்கப்பட்ட கூறுகளை மீண்டும் ஞாபகப்படுத்துகின்ற ஒரு கதை சொல்லியாக தீரனைப் பார்க்கிறேன். ஒய்த்தா மாமா கதை மூலம் சிலவற்றை கட்டுடைத்தும், ஒற்று நோக்கியும் தீரன் கடந்து செல்லும் கிராமியம் மிக ரம்மியமானது.


அடுத்து என்னை மிகவும் கவர்ந்த கதை 'மறிக்கிடா' டபுள் மீனிங்கில் ஒரு முழுக் கதையினையும் நகர்த்திச் செல்ல முடியுமா? எனும் கேள்விக்கு தீரனின் இக்கதையே தக்க சான்று. நேரடியாக சொல்ல கூச்சப்படுகின்ற அல்லது சொல்வதற்கான நெருக்கடிகளை தகர்த்து எறியும் மூலதனம் தீரனுக்கு வாய்த்திருக்கிறது. பெண் ஆட்டிற்கு இனப்பெருக்கம் செய்வதற்காக வெளியூரிலிருந்து கொண்டுவரப்படும் கிடாவினை ஒரு குறியீடாகக் கொண்டு, இரண்டு கதைகளை ஒரே புள்ளியில் நகர்த்தியிருக்கிறார் தீரன். முழுக்க முழுக்க டபுள் மீனிங்கில் சொல்லப்பட்ட கதையின் கிளைமெக்ஸ் இப்படித்தான் முடியும் "சற்று நேரத்தின் பின் தொழுவத்துக்குள் மய்யதீன் காக்காவின் மறிக்கிடா வேகத்துடன் இயங்கத் தொடங்கியது. அகிலமக்கா அதன் வேகத்தில் இலயித்துவிட்டாள்... சின்னப்பர் வரச் சுணங்கும் தானே"


'பொன்னெழுத்துப் பீங்கான்' புலி பயங்கரவாதத்தினால் கொல்லப்பட்ட ஒருவனின் மனைவி, தனது பெண் குழந்தையினை வளர்ப்பதில் எதிர் கொள்கின்ற பெரும் துன்பம் பற்றிய கதையாடலை கொண்டிருக்கிறது. முழுமையாக இக் கதை இதனை பேசாவிட்டாலும், இடை இடையே இம்மாதிரியான புலி பயங்கரவாத்தின் கொடூரங்கள் இக்கதையில் தலைகாட்டுகின்றன. ஆனால் கதையின் ஒரு மித்த குரல் வேறு விடயத்தின் மீதே கரிசனை கொள்கிறது.


'அணில்' ஒரு விசித்திரமான கதை. மனித உணர்வின் வங்குரோத்து அரசியலினை மிக நுணுக்கமாக சொல்லியிருக்கிறது. இறுதியில் இக்கதையின் முடிவினை மாற்றியல் பார்வையினூடாகவே தந்திருக்கிறார் தீரன். தமிழ் - முஸ்லிம் - பௌத்த உறவின் வெளிப்பாடு பற்றியும், இறுதி நிலைப்பாட்டில் அவை கொள்கின்ற மரபு முறைச் செயற்பாடும் கதையின் போக்கினை இன்னொரு பக்கம் நகர்த்தியிருக்கிறது. உறவுப் பாலத்தின் பெரும் நெரிசலினை இக்கதை தோற்றுவித்தாலும், தீரனின் மனோ நிலைசார்ந்த அரசியல் எதிர்மறையாகவே சிந்தித்திருக்கிறது. அதற்கான காரணங்களை வரலாற்றிலிருந்து நாங்கள் நோக்க முடியும். அவற்றினை மறந்து விட்டாலும், இலகுவில் கடந்துவிட முடியாத வடுவாகவே எம் மனதினில் இருக்கிறது. அம்மனதின் வெளிப்பாட்டினை கதை சொல்லியாக ஒரு அணில் உலாவருவதும், அது உணவாகிவிடுவதும், பின்பு அதுவே பழக்கமானதாக அறிக்கை விடுவதும் காலத்தின் தவிர்க்க முடியாத அபத்தமாகும்.


'காக்காமாரும் தேரர்களும்' பத்திரிகைச் செய்திகளாக, துணுக்குகளாக, உரையாடலாக வெளிப்பட்டு இறுதியில் பெரும் பெரும் கதைகள் என்றபடி முடிவடைகிறது. இதில் மிக அற்புதமான ஹாஷ்யம் என்னவெனில், ஆலிமு சபை சொல்கின்ற 'ஜனாதிபதி தலையிட வேண்டும்' எனும் வாக்கியமாகும். சிறுகதைக்குரிய பண்பு இக்கதையின் இறுதியில் முழுமையடைந்து விரிந்து நிற்கின்றன.


'கபடப் பறவைகள்' ஒரு நல்ல கதை. எழுத்தாளர்களுக்கான சாட்டையடி. ஒரு படைப்பாளனின் எழுத்துலகம், அவனால் சேமிக்கப்படுகின்ற சொத்துக்கள், அவற்றின் பெருமானம், அவன் மீதான பிறரின் நிலைப்பாடு என மண்ணறையில் இருந்து எழுந்து வருகின்ற ஒரு எழுத்தாளனின் உலகம் பற்றிப் பேசுகிறது. அதுவும் இறந்து 40 நாட்களின் பின் வருகிறார். மீண்டும் உலகத்தினை வெறுத்து மண்ணறைக்கே செல்கிறார். இறுதியில் இக்கதை இப்படி முடிவடையும் "என்னை மௌத்தாக்கியதற்கு மிக்க நன்றி இறைவனே... என்று துதி செய்து கொண்டே நெடுந்தூக்கத்தில் ஆழ்ந்தேன்"


இவை கதைகள் பற்றிய சிறு பார்வை மட்டுமே. இன்னும் இத் தொகுதியில் உள்ள கள்ளக் கோழி, தீரதம், மும்மான், ஆத்துமீன் ஆசை போன்ற கதைகள் பற்றி நிறையவே பேச முடியும். அதுவரைக்கும் தீரன். ஆர்.எம் நௌஷாத் எனும் அற்புதமான கதை சொல்லி வாழ்க...



MB Azam Mohammed தீரதம் எண்டா என்ன காக்கா


Nawfeer Atham Lebbe அற்புதமான பார்வை. ஆழ அகலத்தைச் சொல்லும் கதையாடல்.
#தீரதம் ஒன்றுமே சரியாக இன்னும் வாசிக்கவில்லை. 
ஒரு பரீட்சை வந்து தொல்லை தருகிறது. இன்ஷா அள்ளாஹ்


No comments:

Post a Comment