Friday, January 28, 2022

உக்குவளை அக்ரம்


 June 14, 2021

தீரதம்.... 
உக்குவளை அக்ரம்



தேடித் தீராவெளி நோக்கி சிறகடிக்கும் ஒரு மின்மினி பூச்சியின்..(ஆர்.எம். நெளஷாத்தின் )பத்து கதைகளடங்கிய சிறுகதைத்தொகுதிதீரதம் .செளுமையும் கனதியும் ஆழமும் விரிவும் நிறைந்தது.பிரமிப்பிலும் ஆச்சரியத்துக்குள்ளும் நம்மை ஆழ்த்தும் கதை சொல்லி.


மறைந்த மாத்தளை எழுத்தாளரான மர்ஹும் பண்ணாமத்துக்கவிராயர் அடிக்கடி உச்சரிக்கும் நாமம்.அவர் இவ்வாறு ஞாபகப்படுத்துவார் ' கிழக்கு மாகாணத்தில் நெளஷாட் என்றொரு எழுத்தாளர் இருக்கிறார் புதிய களத்தில் செளுமைமிக்க கதைகளை படைத்திருக்கிறார்.அவரால் எழுதப்பட்ட ஒவ்வொரு கதையும் ஏதொவோர் பரிசை வென்றெடுத்த கதைகளாகவே பரிமாணம் கொள்கிறது.ஒவ்வொரு எழுத்தாளனும் தவிர்க்காது வாசிக்க வேண்டிய முக்கியப்படைப்பாளி.நீங்களும் கட்டாயம் அவரின் படைப்புகளை தேடி வாசியுங்கள் அவரின் படைப்புகளிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய விடயங்கள் உண்டு' என்பார் .இவ் வழிகாட்டலும் போதனையும் அவர் எழுத்து மீதான பேராவல் கொள்ள தூண்டலாக அமைந்திருந்தது.இவ்வாறு ஒவ்வொரு எழுத்தாளனினதும் அவதானத்திற்கும் கண்ணியத்திற்குரிய படைப்பாளியாக முத்திரையிடப்பட்டவரே ஆர்.எம்.நெளஷாத் என்ற சிறுகதையாளன்.


அவரின் கதைகள் அதன் வெற்றி பற்றி ஓரிடத்தில் இவ்வாறு பதிகிறார். ' அறியப்படாத தளங்களில் இருந்தும் அறியப்பட்ட. தளங்களில் உள்ள.தெரியப்படாத பக்கங்கள் பற்றியும் கூடுதலாகச் சிந்திக்கிறேன்.முதலில் நுகர்பவரை கதைக்குள்ளே வரவைக்கிறேன்அப்புறம் அவர் என்னை வாங்காமல் போக முடியாதபடி செய்து விடுவது என் கதைத்தந்திரம்.இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. எல்லோரும் ஒரே விதமாக 'கதை'த்துக்கொண்டிருப்பதில் எனக்கு சம்மதமில்லை.' என்கிறார்.இங்கிருந்தே மாற்றமும் படைப்பும் திறன் கொள்கிறது.


சிலர் கதைகளை தயாரிக்கிறார்கள் கண்ணைக்கவரும் பலவித கலவையின் கூட்டாக..,பலரோ ஆங்காங்கே கண்டு கேள்விப்பட்ட தகவல்களை கொண்டு பத்திக் பூச்சுவேலையாக ஒட்டி ஒப்பேத்துகின்றனர்.இன்னும் சிலரோ பலர் எழுதிய கதைகளை வாசிப்பனுவபத்தில் உள்வாக்கி, தமக்கிசைவான உவப்பான ஒரு கதையாக உருமாற்றம் செய்து வெளிதள்ளுகின்றனர்.

இக் கதை சொல்லி..தம் வாழ்வினில் நடந்தவை.கடந்தவைகள்.தம் வாழும் சூழலில் சமூகத்தில், வாழ்ந்து மறைந்த மூதாதையர்களின் பழம்பெருமைகளை அடிநாதமாக கொண்டு.அவர்களின் வாழ்வாதாரங்கள்.சம்பிரதாயங்கள்.கலைகலாச்சார பண்பாட்டு விழுமியங்களை உள்வாங்கி கிரகித்து அதனை வரிசை கிரமப்படுத்தி, செதுக்கி..செம்மைப்படுத்தி உயரிய கலைப்படைப்பாக, உயிரும் சதையுமான உயிர்ப்போசைமிக்க கதையோட்டமாக, நம்முள் பரவச் செய்து, நம்முள் ஆழப்பதியச் செய்கிறார்

.இவ்வாறான படைப்புத்திறன் காலத்தால் அழியாததாகா..அழிக்கப்படாத கலைப்படைப்புகளாக மனித மனங்களில் ஆழம் கொள்கிறது.

தீரதம் தொகுதியில் பத்துக்கதைகளில் எது சிறந்த கதையென்றால், பத்தும் பத்து தளங்களில் பத்து வெளிகளை நோக்கி பயணித்து நம்மை பிரமிப்பில் ஆழ்த்துவனவாக உள்ளதில் பத்துமே தனக்குரிய கருவில், கதை சொல்லும் பாங்கில் தனித்துவம் மிக்கனவாகவே நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறது.

கதைக்குள்ளே கதைகளால் மனித மனங்களை ஆழும் கதைசொல்லியாக நம்மில் கம்பீரமாக வீற்றிருக்கும் நாமம். ஆர்.எம்.நெளஷாத் என்பதில் மாற்று கருத்தில்லை என்பேன்.00