Thursday, June 11, 2020

றிஸ்வி யூ முஹம்மத் நபீல்

எளிமையான வாழ்வின் சித்திரங்கள்
------------------------------------------------------------

"தீரதம்" - தீரன். : ஆர்.எம். நௌஸாத் :

சில வருடங்கலாயிற்று;
எஸ்.எல்.எம்.ஹனிபா மணமும் குணமுமான ஒரு பெரிய பலாப்பழத்தோடு ஊருக்கு வந்திருந்தார்.எப்படியும் தீரன்தான் அதை அவரிடம் கேட்டிருக்க வேண்டும். தீரனின் திண்ணையில் ஒரு சிறு வட்டக் களரி, அந்தப் பலாப்பழம்
இரண்டாகப் புண்டு கிடந்தது.
மூவரும் சேர்ந்து அரைப்பாதிக்குமேல் தின்றிருப்போம் .
இதை ஏன் சொல்கிறேனென்றால் அன்று தின்ற பலாப்பழத்தின் சுவை இன்றுவரை நாக்கில் ஒட்டியிருந்தாலும் அதன் பிசின் பின் அட்டையில் அப்பிக் காய்ந்திருக்கிறது.பாருங்கள் இந்த இசைவு இப்படித்தான் பல ஞாபகங்களைக் கொண்டு வருகின்றது.
ஞாபகங்கள் நம்மை எழுதத் தூண்டுகின்றன.வாழ்க்கையில் நமக்குக் கோர்வையாக எல்லாச் சிந்தனைகளும் வருவது கிடையாது.
தீரனுடைய பெரும்பாலான நாவல்களுக்கும் சிறு கதைகளுக்கும் வயது ஏறத்தாழ ஐம்பது.இரண்டாயிரம் ஆண்டிலிருந்துதான் அது நூல் வடிவம் பெறுகின்றன.தமிழ் வாசகர்களிடையே தீரன் நெளஸாத்தை அறிமுகப்படுத்தியது "நட்டுமை" நாவல்தான்.அவர் வெளியிட்ட நூல்களின் வரிசையில் தீரதம் சிறு கதைத் தொகுப்பு எட்டாவது நூல்.
ஒரு தொகுப்பிலுள்ள எல்லாக் கதைகளுமே வாசகனைப் படிக்கத் தூண்டுமா - சாத்தியமா என்றால் 'ஆமாம்' என்றுதான் தீரதம் தொகுப்பிலுள்ள கதைகள் மெய்ப்பித்துக் காட்டியிருக்கின்றன.
தீரதம் கதைகள் காட்டுகின்ற மண் மனிதர்கள் வாழ்க்கையென்பது -
நான் பார்த்துக் கேட்டு அறிந்த ஒன்றுதான்; இதுவும் ஒரு காரணம் எனக்கு ஈர்ப்பு ஏற்பட.
இந்தக் கதைகள் படிப்பின் வழி கிடைக்கப்பெற்ற அறிவினால் உருவாக்கப்படவில்லை;நடைமுறை வாழ்விலிருந்தும் வாழ்பனுபவங்களிலிருந்தும் கதைகள் மலர்ந்து வந்திருக்கின்றன.
கதைகள் நிகழ்கின்ற நேரத்தில் பங்கு பெறுகின்ற மனிதர்கள் அந்தக் கணத்துக்குரிய உரையாடலையே பயன்படுத்துகின்றார்கள்.
ஏற்கனவே தயாரிக்கப்பட்ட வாக்கியங்கள் என்று எதுவுமேயில்லை; சம்பவங்கள் உண்மையாகவுமிருப்பதால் வாசக கவனத்தை அதிகமாக ஈர்க்கிறது.
முதல் கதை
"ஒய்த்தா மாமா"
முஸ்லிம்கள் தமக்குரிய ஆண் மக்களின் 'சுன்னத்' என்கின்ற ஆண் குறியின் முன்தோலை அகற்றுத்தல் படலத்தின் (இன்று பிரபலப்படுத்தாமல் உசுப்பாமல் செய்யப்படுகின்றது) இற்றைக்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிகழ்வை விபரிக்கிறது.
அதற்கான அழைப்பிதழின் மாதிரி வடிவம், நாள், தானம், அதனைச் செய்கின்றவர் (ஒய்த்தா), எடு பிடியாட்கள், அதற்கான உபகரணங்கள் மர உரல், கத்தி, தட்டு, வெள்ளைச் சீலை, என்றெல்லாம் வந்தாலும் அங்கே பேசப்படுகின்ற மொழி அலாதியானது.இந்தக் கதையில் ஒவ்வொரு பாத்திரங்களின் அசைவுகளும் அன்றையப் பொழுதை அலங்கரிக்கின்றன.
இதனை எழுதிய தீரனுக்கு மிகப் பெரிய வேலையொன்று இருந்திருக்க வேண்டும், இன்று அறிவியல் தேடிக்கொண்டிருக்கும் குரல்களைச் சேமித்தல் என்பது, நான் நினைக்கிறேன் அதனை அவர் வெளியில் தேடியிருக்க மாட்டாரென்று ஏனென்றால் அவருக்கிருப்பது அந்தக் குரலும் மொழியும்தான்.
"கள்ளக் கோழி"
கணவனின் தாயின் மூட நம்பிக்கையின் உக்கிரம் இது,
இவரின் "வெள்ளிவிரல்" கதையொன்றின் பாத்திர முகங்களை மீளவும் மினுக்கியிருக்கிறாரோ என எண்ணத் தோன்றியது.
ஆனாலும் உடல் வளர வளர எமக்குள் ஓர் உலகம் எப்பொழுதும் உரையாடிக்கொண்டேயிருக்கிறது,
அதற்கு ஆணும் தெரியாது பெண்ணும் தெரியாது.
அடர்ந்த இருளைப்போன்ற ஆசைகள் அவளைப் பிராயமடையச் செய்கின்றன.
தான் விவகாரத்துச் செய்த கணவனிடம் மீண்டும் தன்னை ஒப்படைக்கும் ஓர்மையான மனம் உண்மையின் பக்கம் அவளை இழுத்துச் செல்கிறது.
அவனும் அதனைப் புரிந்து விடுகிறான்;
ஒரு மனிதனின் பலஹீனங்கள் மட்டுமே முக்கியமானதல்ல; பலஹீனங்களை உதறித் தள்ளும்போதுதான் நாம் உண்மையைக் காண முடியும்.
தீரதம் தொகுப்பின் மற்றோரு கதை
"மறிக்கிடா"
ஒரு நோஞ்சலான புருஷனை வைத்து, மய்யதீன் காக்கா என்ன மாதிரி விளையாடி முடிக்கிறார் என்பதுதான் கதை;
அகிலேஸ்வரி என்கிற அகிலமக்கா வைத்திருக்கும் ஆட்டுப் பெட்டைகளுக்கு மறிக்கிடா தேடி அது அவளையும் தன் தீராக் காமத் தீக்குப் பலியாக்கிற்று.
நகர வாழ்வுதான் கொடுமையானது என்ற மனப்போக்கிலிருந்து விடுபட்டுக் கிராமமும் மனித மனத்தின் வெளிப்பாடுதான் என்கிறது.
நலிவுற்ற ஒரு கணவனுக்கு வாண்ட. நல்ல திடகாத்திரமான பெண்கள் நம் மத்தியில் இல்லையா? ஏன் இல்லை, இருக்கிறார்கள்! எல்லோருமில்லை என்பதும் ஓர் ஆணின் கபடத்தனமான திட்டமிடல் அப்பாவிப் பெண்ணின் அடக்க மனத்தை எப்படிக் கீறலாக்கி விட்டு நகர்கிறது என்றதையும் சொல்லாமலில்லை.
இந்த நவீன நடைமுறைக் காலத்தில் இது போன்றதொரு நிகழ்வு நடந்தேறினால் அது இனச் சண்டையில்தான் முடிந்திருக்கும்; தற்கால வாழ்வு குறித்த பெருமிதம் ஏக்கம் பரிதவிப்பு என்பன மறிக்கடாவின் நுண் கரு எனலாம். வெறும் கிராமத்தானாக இல்லாமல் அவர் வாழ்ந்த கிராமத்தில் எது நடந்ததோ அது அப்படியே கதைகளாகியிருக்கின்றன.
"பொன்னெழுத்துப் பீங்கான்"
இற்றைக்கு எழுபது என்பது ஆண்டுகளுக்கு முன்னர் நம் நாட்டில் பாவனையிலிருந்த கோட்டுச் சித்திர வேலைப்பாடுகள் நிறைந்த மகாராணியின் மணி முடி இலாஞ்சனை புறமாகப் பதித்த பீங்கான்தான் அது.
அதிலேயே உணவுண்டுவந்த தந்தையின் மரணத்தின் பின் தொடரும் வங்கிசப் பெருமையை வெளிநாட்டில் பெருமிதமாக வாழும் தன் மகள் அங்குள்ள வெள்ளையினத்து ஒருவனை திருமணம் செய்ய இருப்பதை அறிந்து பேசுகின்ற உரை கதையாகியிருக்கிறது.
பழகிய கிராமம், பழகிய தெருக்கள், பழகிய மனிதர்கள், பழகிய களங்கள். ஆனால் அவற்றைப் புதிய வெளிச்சத்தில் நமக்குக் காட்டுகிறார் தீரன்.
"அணில்"
குறிப்பிட்ட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு கதை,
ஒவ்வொரு தோல்வி அனுபவமும் பற்றியெரியும் நினைவாகப் படர்கிறது.
அந்த நினைவின் நெருப்பில் இன்னொருவன் குளிக்காய அல்லது கிண்டலடிக்க அந்தக் கொடும் சொற்கள் வெளியே பொழியும் மழை போல நம்மை இறங்கி அழுத்துகின்றன.
கதையில்வரும் போஸ்ட் மாஸ்டர் சகோதர இனம் சார்ந்தவர்; இவரின் மற்றோரு இனம் சார்ந்த கோரச் சொற்கள் நெஞ்சைத் துளைக்கின்றன.
அவ்வாறான மனிதர்கள் எந்த சமூகத்துக்கும் பொருத்தமற்றவர்களே, அவ்வாறானவர்கள் நமது சமூகத்திலும் இருக்கிறார்கள்; அவர்கள் நிராகரிக்கப்பட வேண்டியவர்கள். முடிவு அழுத்தமாக இருப்பினும் ஓர் அபூர்வ ரகமான கதை
"கபடப்பறவைக" ளில் தன் மரணத்தின் பின்நிகழும் மனித நடத்தைகளை இங்கிதமாக வரைந்திருக்கிறார்.
நவீன வாழ்வின் வேகச் சூழலில் தவிக்கும் மனிதர்களைப் பற்றியது, பணம் தேடித் தான் சேகரித்து வைத்திருந்த புத்தகங்கள் எவ்வளவு கேவலமாக எள்ளப்படுகின்றன? தனது எண்ணங்கள், அபிலாசைகள் பின்வரும் சந்ததிகளால் உதாசீனமும் புறக்கணிப்பும் - தான் இல்லாத சூழலில் எவ்வாறு பரிதாபமிக்கதாய் மாறுகிறது?
"தீரதம்" கதையில் தனி நபரெனும் வலிந்த சுயத்தை, அடையாளத்தைத் தனக்குள் உற்று நோக்குதல் வாயிலாகப் புறந்தள்ளுவது;
இது துறவொத்த நிலை;
தீரனைப் பொறுத்தவரை துறவியாகிவிடவில்லை; என்றாலும் அவன் மனம் திறப்பதன் மூலம் மன அழுக்குகளை அல்லது ரகசியங்கள் களைந்தபின், போலியான உலகின் சுய அடையாளம் ஞானத்தின் திறவாக மாறுகிறது.
"ஆத்துமீன் ஆசை"
மீன்சந்தையில் ஒரு மாஸ்டர் போதிய பணமில்லாமல் அவதியுறும் கதி;
ஆத்துமீன் சாப்பிடும் மனைவியின் ஆசை ஈடேறவில்லை.
நகையாக இருப்பினும் ஆசிரியனின் யதார்த்த வகைப்பட்ட வெளியினைப் பேசுகின்ற கதையது.
"காக்காமாரும் தேரர்களும்"
ஒரு இனத்தின் அடக்குமுறைக்கு எதிரான குரல்.
என்றாலும் தனக்கான ஒரு சுயதளமில்லாத விசாரணையின் மீட்சியாகவும் அந்தப் பத்திராதிபரின் நடத்தையை நோக்கலாம்.
"மும்மான்"
ஒற்றை அர்த்தம் தாண்டி வாசகனின் அர்த்தப்படுத்தல்களில் அதிக கவனத்தைக் குவிக்கிறது.
இன அடையாளத்தின் ஆழ் நிலைத் தளத்தோடு, முத்தள இயக்கமாகவும் சிங்கம், புலி, மான் பல்வித அர்த்தப் பரிமாணங்களோடு பண்னொலிமப் பண்பினையும் சொல்வெளியில் படைக்கிறது.
சற்று இளக்கமான மனநிலை வாய்க்கப் பெற்றவர்களுக்கு ஒரு வகையாகவும் காதலாகிக் கசிந்து உருகுவதை ஒரு பிடி உப்புடன் எடுத்துக் கொள்பவர்களுக்கு இன்னொரு வகையாகவும் கதைகள் அமைந்திருக்கின்றன.
பத்துக் கதைகள் கொண்ட
இத் தொகுப்பில் வரக்கூடிய மனிதர்கள் பெரிய கனவோ இலட்சியமோ கொண்டவர்களல்ல. அவர்களுக்குரிய எந்த எளிய தேவைகளும் நாளைக்குரியதாக இல்லை;
மாறாக அந்தக் கனத்துக்குரியதாவே இருக்கின்றன.
இந்த வாழ்க்கைச் சித்தரிப்புத்தான் இன்றையக் காலத்துக்கு முக்கியமானது மட்டுமல்ல; தீரதம் தொகுப்பையும் முக்கியமானதாக்குகிறது.
- நபீல்.

Comments

  • பலாச்சுளைகள் கழட்டுவது போல தீரனின் கதைகளை ருசிபார்த்து விட்டீர்கள்..அருமை Nafeel
    3
  • வாசித்த கதைகள். மீண்டும் ஒவ்வொன்றாய் நினைத்துப் பார்க்க வைத்தது உங்கள் பதிவு.
    நன்றி.
    3

  • தீரதத்தின் வாசிப்பு அனுபவத்தை, கதையோட்டத்தோடு இழைய விடும் பாங்கு அருமை நண்பரே.
    3

  • பத்து முத்துக்களும் பத்திரமாக நெஞ்சுக்கூட்டுக்குள்..அதில் முதல்தர முத்து: "பொன்னெழுத்துப் பீங்கான்"
    3

  • வாழ்த்துகள்
    3
    • Like
    • Reply
    • 7w
  • படைத்ததிலும் சுவைத்ததிலும் மணம் கமழ்கிறது
    2
    • Like
    • Reply
    • 7w
  • தலைப்புக் கதை தீரதம் மற்றும் காக்காமாரும் தேரர்களும், மும்மான், கபடப் பறவைகள், ஆத்துமீன் ஆசை ஆகிய சிறுகதைகளும் குறிப்பிடத்தக்கவை.வெள்ளிவிரல் (தாய் மொழி)தொகுதிக் கதைகள் அவரது திறமைக்கு மேலதிக சான்று.எமது சிறுகதை, நாவல் ( நட்டுமை) வரலாற்றின் அகற்ற முடிய… 
    See More
    5
    • Like
    • Reply
    • 7w
    • Abdul Latiff
      "கபடப்பறவைக"ளில் தன் மரணத்தின்பின் நிகழும் மனித நடத்தைகளை இங்கிதமாக வரைந்திருக்கிறார்;
      நவீன வாழ்வின் வேகச் சூழலில் தவிக்கும் மனிதர்களைப் பற்றியது, பணம் தேடித் தான் சேகரித்து வைத்திருந்த புத்தகங்கள் எவ்வளவு கேவலமாக எள்ளப்படுகிறது?… 
      See More
      2
      • Like
      • Reply
      • 7w
      • Edited

    • R.M. Nowsaath
      உண்மைதான்; நமது குனிந்த பார்வையையும் எழுத்தாணியின் ஓட்டத்தையும் சகித்துக் கொண்டு, சமைத்துத் தருகிறாளே, அவள்தான் மச்சான் நம் அனைத்துக்கும் நமூனா ..
      2
    Write a reply...


  • நம் அன்புக்குரிய எழுத்தாளர். அவரது எல்லா எழுத்துக்களுமே பிடிக்கும். தீரதத்தை தவிர ஏனைய புத்தகங்களை வாசகர் பரப்புக்கு கொண்டுசெல்லும் பேறு எனக்கிருந்தது. அவரது அடுத்த நாவலுக்காக காத்திருக்கிறோம். பிடி கொடுக்கிறார் இல்லை. பார்ப்போம்.
    3

  • நபீல் அருமை. இந்தக் காலம் உங்களுக்குப் பொருத்தமாகிவிட்டது. அழகாகச் சொல்கிறீர்கள்.
    1

No comments:

Post a Comment